சீதாராமன் – ஜமீலா கணேசன்

அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் நான் வசிக்கும் சிறு நகரில் சமீபத்தில் ஒரு ரத ஊர்வலம் இஸ்கான் அமைப்பால் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் நம்ம ஊர் போலவே ரதத்தின் கயிற்றை மக்கள் பிடித்து இழுக்க தேர் பூபோல நகர்ந்து சென்றது. தேர் முன் செல்ல பின்னர் கிருஷ்ணன், ராமன் என பல கடவுளர் வேடமிட்டவர்கள் நடக்க, பார்க்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களுடன் சேர்ந்து கரகோஷமிட்டார்கள் கிருஷ்ணா வேடமிட்டவர் சக்கரத்தை ஏந்தி இருந்தார் கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே வில் எடுக்காமல்  மாறுபட்டு நவீன ஆயுதம் ஏந்திய நவீனவாதியாகத் திகழ்ந்தார்.  மூன்று நான்கு கிருஷ்ணர்களுக்கு இடையே ஒரு  ராமன் வேடமணிந்து செல்வதைப் பார்த்தேன் அவர் சாந்த சொரூபியாய் கையில் வில்லை ஏந்திச்  சென்றார். கிருஷ்ணனாகவும் ராமனாகவும் வேடமிட்டபெரியவர்களும் சிறியவர்களும் கம்பீரமாக சுற்றியிருக்கும் மக்களைப் பெருமிதமாக பார்த்துக்கொண்டே நடந்து சென்றனர்.  

எத்தனையோ காலத்திற்கு முன் வாழ்ந்த அல்லது தொன்மமாக நம்பப்படுகிற  ராமனும் கிருஷ்ணனும் அந்த சிறுவர்களின் உள்ளிருந்து வெளியே வருவது போலிருந்தது. எத்தனையோ காலங்களுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையரை கொண்டாடுவது நம்மை கொண்டாடுவதுதானே.   வில்லேந்திய ராமன் என்னும் படிமம் கம்பராமாயணம் முழுவதும் வருவது நினைவில் வந்தது. சாந்தமே வடிவானவன் அமைதியான வாழ்வை அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும் அவன் வில்லேந்த முக்கிய காரணங்களைச் சிந்தித்தேன்.  

ஆசிரியரான வசிட்டருக்கு கீழ்ப்படிந்து  முனிவர்களுக்கு தீங்கு புரிபவர்களை சொன்ன அளவில் வில்லால் தாக்கிக் கொன்றான், உயிர்ச்சேதம் அதில் மிகக்  குறைவு. தாடகை ஒரு பெண்  என்பதற்காக கொல்லத் தயங்கியன்  இராமன். அதன் பின்னர் பரசுராமர் போருக்கு அழைக்க அப்போதுதான் திருமணம் முடிந்து மனைவியோடு அயோத்திக்குத்  திரும்பும் பொது போருக்கு அழைத்த பரசுராமரை ராமன் வென்றதும் நாம் அறிவோம். அதன் பின்னர் கம்பராமாயணம் முழுதும் வில்லேந்தி நடந்து கொண்டே இருக்கிறானே, சாந்தமே உருவானவன் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்று சிந்தித்தால் முதற் காரணம் சீதை மேல் கொண்ட தீராத காதல் என்பது விளங்கும்.  

தந்தையர்க்கும், தாய்க்கும், சகோதரருக்கும், நாட்டு மக்களுக்கும் அவன் செல்லப்பிள்ளை. எல்லோரும் அவனை விரும்புகிறார்கள்.  ஆனால் அவன் விரும்புவது சீதை என்னும் மன்மதனும் வடிக்க ஒண்ணா பேரழகியை.  கம்பராமாயணத்தில் முதல் ஐயாயிரம் பாடல்களில் பல காண்டங்களில் ராமன் தசரத ராமனோ அல்லது கோசலை ராமனோ அன்றி சீதாராமனே ஆகிப் பொலிந்து நிற்பதைக்  கம்பனின்  பாடல்கள் வழிதான் விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

         இராமன் மேல் பேரன்பு கொண்டவர்கள் எல்லாம் அவன் ஆளுமையில் கரைந்து உருகக் கூடியவர்கள். அப்படிப்பட்ட இராமன் ஒரு பெண்ணை நினைத்து உருகி எப்படி சீதாராமன் ஆனான் என்பதைக் கம்பன் பாலகாண்டத்தில் சுவைபடக் கூறுகிறான். வால்மீகி ராமாயணத்தில் இராமனும் சீதையும் காதலிப்பது போன்று காட்சி வைக்கப்படவில்லை.அதற்குப்  பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. ஆரண்ய காண்டத்தில் அந்தணர் வேடமிட்டு வந்த ராவணன் சீதையைப் பற்றி கேட்கும் போது அவள் சொல்கிறாள். திருமணம் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததாகவும் இராமனுக்கு இருபத்து ஐந்து வயது என்றும் தனக்கு பதினெட்டு வயது என்றும் கூறுகிறாள். அப்படி என்றால் அவளுக்கு திருமணம் ஆகும்போது ஆறு வயது. அந்த வயதில் காதல் சாத்தியமில்லை அல்லவா. அதனால்தான் வால்மீகி காதலை வைக்கவில்லை என்ற காரணமும் நியாயமாக இருக்கிறது. சீதையின் வயது பதினாறு வயது என்றும் த்ரேதாயுகத்தில் திருமணத்திற்கு முன் பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுவதுண்டு. மூலநூலில் இல்லாத காதலைக் கம்பர் மட்டுமல்ல துளசிதாசரும் பாடியிருக்கிறார்.  கம்பர் காதலை வைத்தது ஏன்? சங்க இலக்கியங்களில்  ராமாயணத்தின் பல நிகழ்வுகள் பல பாடல்களில் வருவதைப் பார்க்கலாம். நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் அகத்திணையில் ஐம்பத்து நான்காவது பாடலுக்குத் தான் எழுதிய  உரையில்  சீதை இராமனைத் திருமணத்திற்கு முன்னரே கண்டதாக உள்ள பாடலைக் குறிப்பிடுகிறார்.

 மிதிலை மூதூர் எய்திய ஞான்றை

மதியுடம் பட்ட மடக்கண் சீதை

கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக்

கேட்ட பாம்பின் வாட்டம்

எய்தித் துயில் எழுந்து மயங்கினாள்

முதல் நாள் இராமனைக் கண்ட சீதை அடுத்த நாள் வில் நாணேற்றும் ஒலி கேட்டு வில்லை யார் முறித்தாரோ  என்று மனம் கலங்குவதாக இப்பாடல் அமைந்துள்ளது. எனவே முன்னரே தமிழில் இராமகாதை இருந்திருக்கலாம். அதிலிருந்து காதலைக் கம்பன் எடுத்தாண்டிருக்கலாம். களவு, கற்பு என தமிழ் பண்பாட்டிற்கு உரிய காதலை எழுதுவது அவசியம் என்று கூட கம்பர் நினைத்திருக்கலாம். அகம், புறம் பாடுவது காவிய  இயல்புதானே! கம்பன் மூலநூலை கரைத்துக் குடித்திருப்பான். வால்மீகியை விட ஒரு படி  விஞ்சி உச்சத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்து மூலத்தில் இல்லாத சிருங்கார ரசத்தைக் கொண்டு வந்திருக்கலாம். இல்லை என்றாலும் கம்பன் சிருங்கார ரசத்தில் மூழ்கிக் கிடந்தவன் என்ற பேச்சுகள் வழங்கிவருவது உண்மைதானே அதுவும் காரணமாயிருக்கலாம்.

இராமனும் இலக்குவனும், விசுவாமித்திரர் உடன்  மிதிலை வாசலில் நுழைகிறார்கள். காலம் முழுதும் இந்தக் காதலை எண்ணிக் கண்ணீர் வடிக்கப் போகும் நிலை தெரிந்திருந்தால் மிதிலை வாயிலில் நுழைந்திருப்பானோ  என்னவோ. ஆனால் காவியத் தலைவன் காதலிக்காமல் கம்பன் விடுவானா.

 கமலச் செங்கண் ஐயனை 

ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா

 

என்ற பாடலில் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகள், மதுரையில் நுழைந்த சிலப்பதிகாரக் கோவலனை “உள்ளே வராதே” என்று தடுத்தது போல தடுக்கவில்லை.  அதற்கு மாறாக “திருமகள் இங்கே சீதையாக உனக்காக பிறந்திருக்கிறாள். ராமா வா வா” என்று அழைகக்கிறது. ராமன் சீதையைப் பார்ப்பதற்கு முன்னமே நமக்கு திருமகளின் அவதாரம் என்று முதன் முதலில் அறிமுகப்படுத்தி விடுகிறான், எது எப்படியோ முதலில் சீதையின் பெயரைக் கூறி நமக்கு அறிமுகப் படுத்துவது அந்தக் கொடிகள்தான். இராமன் அந்த ஊருக்குள் நுழைந்து விட்டான். காடு, மேடு, அரக்கர்களுடன் போர், வேள்வி என்று அலைந்து விட்டு இராமன் மிதிலை தெருக்களில் நுழையும்போது வேறுபட்ட காட்சிகளைக் காட்டுகிறான் கம்பன். மகர வீணையும், வாய்ப்பாட்டும் இனிமையாக ஒலிக்கிறது.அழகிய பெண்கள் அபிநயித்து நடனம் ஆடுகிறார்கள். காதலனுடன் ஊடிய பெண்கள் தங்களது  மாலைகளை தெருவில் தூக்கி எறிகின்றனர். சில பெண்கள் நீர் நிலைகளில் குளித்துக் கொண்டிருக்கின்றனர். வட்டாடுகின்றனர். ஒருபக்கம் இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இளங்குமரர்கள் கூட்டம் நிற்கிறது. காட்சிகள் இப்படி இருந்தால் வராத காதலும் வந்து விடாதா! ரம்மியமான இக்காட்சிகளை பார்த்துக் கொண்டே மூவரும் நடக்கின்றனர். அந்த நேரத்தில்தான் கம்பன் சீதையின் அழகைப் புகழ்கிறான். “மதனற்கு எழுத ஒண்ணாச் சீதை’, என்று குறிப்பிடுகிறான் கம்பன். மன்மதன் அமுதத்தைத்  தொட்டு தூரிகையால் சீதையின் சித்திரம் எழுதத் துணிகிறான். சித்திரத்தை முடிக்க இயலாமல் தடுமாறுகிறானாம்.  அந்தக் கோபத்தில்தான் ராமனின் காதலம்பை சீதையின் கண்களில் அடுத்து வரப் போகும் காட்சியில் எய்தானோ! பெண்களே கூட்டமாக நின்று சீதையின் அழகை ரசிக்கிறார்களாம்.

பொன்னின் சோதி போதினில் நாற்றம்

தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்

என்று கூறும் கம்பன்  திருமகள் தவிர யாரையுமே ஒப்புமை கூற முடியவில்லை என்கிறான்.  அஃறிணைப் பொருட்களும் சீதையைப் பார்த்து , “குன்றும் சுவரும் திண்கல்லும் புல்லும் கண்டு உருக ஒரு பெண் கனி நின்றாள்” என்று உருகுகிறதாம். அன்னங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் சீதை மின்னலுக்கு எல்லாம் அரசிபோல தென்பட்டாள். அங்கே வந்த இராமன் அவளை தற்செயலாக பார்க்க சீதையும் பார்க்க அங்கே தான் அந்த வரலாற்றுத் தருணம் நிகழ்கிறது.

“கண்ணோடு கண்ணினைக் கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு ஆகிவிட்டது. இதுதான் இராமன் சீதாராமன் ஆகும் தருணம். ஒருமுறை பார்த்தவுடன் இது சாத்தியமா என்று நினைக்கலாம். இந்த காலத்திலும் கண்டதும் காதல் நடந்து கொண்டுதானே இருக்கிறது. தீயை பற்ற வைக்க ஒரு நொடி போதுமே.அதுவும் காதல் தீ பற்றிக் கொண்டால் அணைக்கவே முடியாது. அவர்கள் இருவரும் ஏற்கனவே திருமாலும் திருமகளுமாய் இருந்தவர்கள்தானே. இப்போது மனிதப் பிறவியில் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் பிரிந்த இருவரும்  இப்போதுதான் பார்க்கிறார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்ற சிறப்பான பாடல் பொருத்தமாக வருகிறது. துளசிதாசர் தன் இராமசரித மானசம் நூலில் ராமனுக்கும் சீதைக்குமான  காதலை இவ்வாறு கூறுகிறார். முனிவரோடும், தம்பியுடனும் ஜனகனின் அரண்மனையில் தங்கும் இராமன் இலக்குவனுடன் காலையில் பூஜைக்கு மலர் கொய்ய தோட்டத்திற்குச் செல்கிறான். சீதையும் தோழிகளுடன் அங்குள்ள கோயிலுக்கு  தற்செயலாக வருகிறாள். சீதையின் அழகைப் பார்த்து இராமனுக்கு பேச்சே வரவில்லையாம்.  சீதையும் அப்படியே திகைத்து நிற்கிறாள். சீதை அங்கிருக்கும் பார்வதியாகிய பவானிதேவி கோயிலுக்கு போய் ராமனே மணாளனாக வர வேண்டும் என்று வேண்டுகிறாள். பவானி தேவியின் மாலை நழுவி சீதையின் மேல் விழுகிறது. என்ன அழகான கற்பனை!

கம்பருக்கு வருவோம். சீதையை இராமன் பார்த்த அளவில் சீதாராமன் ஆகிவிட்டது நமக்குப் புரிகிறது. இராமன் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் சீதைக்குக் காதல் நோய் பெருகியது.

 கண்வழி புகுந்த காதல்நோய்

பால் உறு பிரை

என எங்கும் பரவியது. ஒரு துளி மோர் பாலைத் தயிராக்குவது  போல இவன் கண்கள் மூலம் ஏற்பட்ட காதல் நோயானது என் உடல் முழுக்க பரவி நின்றது என வருந்துகிறாள். மலர்ப்படுக்கை கருகியது. நெருப்பிலிலிட்ட அன்னம்போல் துடிக்கிறாள். செவிலித்தாயர்களும், தோழிகளும்  இது தெரியாமல் சந்தனத்தைப் பூசுகிறார்கள்.  கண்ணேறு கழிக்கிறார்கள். சீதை நினைக்கிறாள், “யானை போன்று நடந்து வந்த அழகன் யாராக இருப்பான், ஒருவேளை மன்மதனோ என்று எண்ணியவள் இல்லையில்லை கையில் மூங்கில் வில்தான் கொண்டிருந்தான்”, என்று தெளிவு கொள்கிறாள்.    இந்திர நீலம் போன்ற முடியோ, சந்திர வதனமோ, தாழ்ந்த கைகளோ, சுந்தரமணித் தோளோ  இவையெல்லாம் அவளுடைய உயிரைப் பறிக்க வில்லையாம். அவனுடைய புன்முறுவல்தான் தன் உயிரை உண்டதென்று  தனக்குள் புலம்பினாள் அந்தப் பேதை. இவளுக்காவது நிம்மதியாக இராமனை நினைக்க முடிந்தது. ஆனால் இராமன் நிம்மதியாக சீதையை நினைக்க இயலாத சூழல்.   முனிவருடனும், தம்பியுடனும் அரண்மனைக்குச் சென்று தங்குகிறார்கள். விசுவாமித்திரர் சதானந்த முனிவரிடம்  ராமனின் வீரச் செயல்களையும் அவர் தாயான அகலிகையின் சாபம் போக்கியதையும்  எடுத்துச் சொல்கிறார். அடுத்து சதானந்தர் விசுவாமித்திரரின் பெருமைகளை அவருடைய வாழ்க்கை பற்றி மிக விரிவாக ராமனிடம் கூறுகிறார். ஒருவழியாக அவர்கள் பேசி முடித்த பின் ராமன் படுக்கைக்கு வந்து சேருகிறான். தனிமையில் இராமன் இருக்கிறான். “இரவும் நிலவும் தானும் அத் தையலும் ஆனான்” என்ற பாடல் வருகிறது.இரவு வந்தது நிலவும் இருக்கிறது. அந்த தையலாகிய சீதையும் அவனே ஆகினான் என்று கூறி ஈருடல் ஓருயிர் என்பதை உறுதிப் படுத்துகிறான். பார்க்கும் எல்லாவற்றிலுமே அவள் பொன்னுருவமே  தெரிகிறது. ஒருவேளை மணமானவளாக இருப்பாளோ என்று சந்தேகப் படுகிறான். உடனே சொல்கிறான், “நல்வழி அல்வழி என் மனம் ஆகுமோ” , என் மனம் எப்போதும் அறத்தை மீறாது, அவள் எனக்கென பிறந்தவள் தான் என சமாதானம் அடைகிறான்.  இரவெல்லாம் தூங்காமல் அவளையே எண்ணிக் கொண்டிருக்கிறான். சங்கப் பாடல்களில் பயின்று வரும் தலைவனும் தலைவியும் களவு நிலையில் உருகிப் பாடுவதை அப்படியே ஒத்திருக்கிறது. ராமனின் காதல்.  ஜனகனின் அவையில் வில்லை உடைப்பதில் அவனுடைய காதல் அடுத்த கட்டத்தை அடைவதைப் பார்க்கலாம்.

       மறுநாள் காலை முனிவருடன் தம்பியுடனும் ஜனகனின் அவைக்குச் சென்றதூம் இராமனைப் பற்றி ஜனகரிடம்   குலமரபு, தந்தை, கல்வி கேள்வியிலிருந்து தாடகை வதம், அகலிகை சாபம் நீக்கியது என ராமனைப் பற்றி விசுவாமித்திரர் அனைத்தையும் விளக்குகிறார். உடனே ஜனகர் வில்லின் வரலாறைக் கூறிமுடித்து மணமகள் சீதாவின் பிறப்பு பற்றி கூறுகிறார். மணமகன், மணமகளின் விவரங்கள் பரிமாறப்படுவது இன்றுவரை உள்ளதுதானே! ஜனகர் வில்லை  இராமன் உடைத்தாலாவது தன் மகளின் திருமணம் நடக்காதா என்று ஏங்குகிறார். விசுவாமித்திரரின் சொல்லுக்கிணங்க இராமன் எழுந்தான் நடந்தான் நாண் ஏற்றினதும் தெரியவில்லை உடைத்ததும் தெரியவில்லை எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.  சீதைதான் ராமனுக்கு மணமகள் என்று கம்பனுக்கும், நமக்கும் தெரியும். ஆனால் சீதைக்கும் ராமனுக்கும் தெரியாதே. அவர்கள் காதலினால் அடையும் பாட்டைக் கம்பன் விவரிப்பாதைப் பாருங்கள்.  

        அழகான தாமரைத் தடாகம் பக்கத்திலே ஒரு மலர்ப்படுக்கை காதல் நோய் மிக  சீதை படுத்திருக்கிறாள்.  சீதையின் தோழி  நீலமாலை வில் முறிந்ததைச்  சொல்ல வேகமாக ஓடிச்சென்று சீதையின் முன் சென்று ஆடுகிறாள் பாடுகிறாள். சீதை கேட்கிறாள், “உனக்கு என்ன இவ்வளவு மகிழ்ச்சி விஷயம் என்ன” என்று.  “உங்களுக்கு திருமண வேளை வந்துவிட்டதம்மா! தசரதனின் குமாரராம். முனிவருடன் தம்பியோடும் வந்தாராம். வில்லை பூப்போல முறித்து விட்டாராம்” என்று கூறியவுடன் சீதைக்கு ‘அவரேதான் ஐயமே இல்லை’, என்று நினைக்கிறாள். “ஆனாலும் ஒருவேளை வேறு யாராகவோ இருந்துவிட்டால்.. அப்படி மட்டும் இருந்துவிட்டால், உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று நினைக்கிறாள் “உயிரை விட காதல் பெரிது” என்ற சீதையின் எண்ணத்தை இந்த பாடல் மூலம் அவளுடைய காதலும் பொங்கிப் பெருகிக் கொண்டே செல்வதைப் பார்க்கலாம். சீதைக்காவது நீலமாலை கொஞ்சமாவது உதவினாள். ஆனால் ராமனுக்கு அவளா இவள் என்ற மனப் போராட்டத்திற்கு இடையே தேரில் உலா வருகிறான், மணமகன் அழைப்பு அவசியம்தானே! அதிலும் காவியத் தலைவன் உலா செல்வது மரபு. பார்க்கும் பெண்கள் எல்லாம் அவன் அழகைக்கண்டு மயங்குகின்றனர். “இந்த சீதை என்ன தவம் செய்தாளோ இவனை அடைய”, என அங்கலாய்க்கின்றனர். பெண்களில்   ஒருவரும் இராமனை  முழுமையாக பார்க்க முடியவில்லையாம். இங்குதான் கம்பர் பாடுகிறார்.

 தோள் கண்டார் தோளே கண்டார்

தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்

தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே

வடிவினை முடியக் கண்டார்

ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் காதலனாக  உறைவது அவனின் உருவம்தான் போலும்.

அரண்மனையில் அயோத்தியிலிருந்து வந்த தசரதன், அரசர்கள், மக்கள்  ஜனகன் முதலானோர் வந்து  பெண்ணை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.  அதைவிட ராமன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  அணிகலன்களுக்கு எல்லாம் அழகு சேர்த்த சீதை ராமனின் முன்னால், அவையில் வணங்கி நிற்கிறாள். அவளுடைய காதின் குழைகள் ஆடுவது எப்படி இருக்கிறது தெரியுமா? “அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன் கொல் ஆம்கொல்” , சீதையின் மனம் கவர்ந்தவன்தான் மணமகனா அல்லது வேறு யாராவதா என குழைகள் அலைபாய்கிறதாம். அவையே அவள் அழகைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறது. இராமன் பார்க்கிறான் “அவள்தான் இவள்” என்று ஆனந்தம் அடைகிறான். சீதா மட்டும் என்னவாம்! வளையல்களைத் திருத்துவது போல் ஓரக்கண் பார்வை கொண்டு பார்த்து “ஓ இவன்தான் அவன்” என்று உள்ளூற குதூகலிக்கிறாள். விசுவாமித்திரர் சொல்கிறார், ”  ராமா நீ முறித்த இந்த வில் கிடக்கட்டும்.   இப்படிப்பட்ட திருமகள் போன்ற சீதைக்கு வேண்டி ஏழு மலைகளையும் கூட உடைக்கலாம்”.  இதைக் கேட்ட ராமனின் மனம் நிறைந்திருக்காதா!

         நாளைக்குத் திருமணம். இடையில் ஒருநாள் இரவு தான். சீதைக்கு காதலும் காமமும் பெருகி செய்வதறியாது வெதும்புகிறாள்.  இருள், நிலவு,தென்றல், அன்றில் பறவை என அனைத்தும் தன்  காதல் நோயை மிகுவிக்கின்றன என்று அவற்றைப் பழித்துப் பேசுகிறாள். “தாகம் இருக்கிறது பக்கத்தில் நீர்நிலை இருக்கிறது ஆனால் படிக்கட்டுகள் இல்லாததால் தாகம் தீர்க்க இயலவில்லை. அதுபோல இதோ ராமன் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் காண முடியவில்லையே” என வருந்துகிறாள் சீதை. ராமனுக்கு மட்டும் காதல் நோய் மிகாதா! சீதை என்ற மின்னலால் தாக்கப்பட்டு விட்டானாம். நிலவையும், இருளையும், தன் மனத்தையும் தன்னிடம் கருணை காட்டச் சொல்லி இறைஞ்சுகிறான். “மனமே நீ என்னோடு இவ்வளவு காலமாகச் சேர்ந்து இருந்ததை மறந்துவிட்டு சீதையைப் பார்த்த கணம் முதல் அவளிடம் போவது நியாயமா “என்று கேட்கிறான். 

       எல்லோரும் எதிர்பார்த்த காலை வந்தது. இராமனைப் பலவாறாக அலங்கரிக்கிறார்கள். வெண்பட்டு உடுத்தி அணிகலன்களுடன் கண் கொள்ளாக்காட்சியாக ஜொலிக்கிறான். அவனுடைய இரண்டு குண்டலங்களும் காதின் அருகே சென்று சீதை கொண்ட காதல் நோயை இரகசியமாகச் சொல்கிறது என கம்பன் புனைகிறான். என்ன கற்பனை! இராமனும் சீதையும்  மணமேடைக்கு வந்தாயிற்று. ஜனகர் இராமனின் வலக்கையில் நீர் வார்த்து, “திருமகளும் திருமாலும் போல நீடூழி வாழ்க” என்று கூறி கன்னிகா தானம் செய்கிறார். அங்குள்ள அனைவரும் பூமாரி பொழிந்தனர். சீதையின் கரத்தைப் பிடித்து இராமன் தீயை வலம் வந்தான். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் இனிதே நடந்தது.

 ஆர்த்தன பெயர்கள் ஆர்த்தன சங்கம்

 ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு

 ஆர்த்தன வண்டினம் ஆர்த்தன வேலை

 அடடா! என்ன அழகு! திருமணக்கோலத்தில் இராமனும் சீதையும் நிற்கும் பேரழகைக் கண்டு அனைவரும் மெய்ம்மறந்தனர். அந்த தெய்வீக திருமணக் கோலத்தை மானசீகமாக ரசித்த தியாகராஜ சுவாமிகள் சீதா கல்யாண வைபோகம் பாடினார் என்பது நமக்கு தெரியும். நாம் அவர்களை மணமக்களாய்ப் பார்ப்போம். ஆனால் அவர் அதற்கு ஒரு படி மேலே போய் சீதையைத்  தாயாகவும் தந்தையாகவும் பார்க்கிறார். அனைவரையும் வணங்கி மணமக்கள் அரண்மனைக்குச் சென்றனர். சீதை தன் மாமியார்களை வணங்க, அவர்களும் மனம் மகிழ்ந்து பரிசுகள் வழங்குகிறார்கள். பின் இருவரும் இனிதே பள்ளியறை புகுந்தனர்.  இப்படியாகத்தான் அயோத்தியின் இளவல், சீதா ராமனாக மாறிய தருணம் நிகழ்ந்தது.  

    பாலகாண்டம்  முழுவதும் கம்பர் ராமனையும் சீதையையும், திருமகள், திருமாலின் அவதாரங்கள் என்று பலமுறை கூறி உறுதிப்படுத்துகிறார். இராமனின் தோள்வலிமை,  சீதையின் பேரழகு என்று பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்படுகின்றன. ராமனின் காதல் சீதைக்கு மட்டுமே என்பதும் அந்த அறத்திலிருந்து அவன் ஒருபோதும் மாறப் போவதில்லை என்ற காவியத்தின் முக்கியமான கருத்தும் விதைக்கப்படுகிறது.   சீதை ராமனில்லாவிடில் உயிர் துறக்கவும் தயார் என்று கூறுவது அவள் கற்புக்கரசி என்னும் குணநலனை விளக்குவதாக உள்ளது. காவியத்தின் முக்கிய கூறான அகமும் புறமும் இதில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் கம்பராமாயணத்தில் மற்ற எல்லாவிடங்களை விடவும் இந்த காண்டத்தில் காதலின் உச்சகட்ட கற்பனைகள், புறப்பொருட்களை வைத்து அகத்தை உணர்த்தும் தன்மையைப் பார்க்க முடிகிறது.  களவு வாழ்க்கை முடிந்து கற்பு வாழ்க்கை தொடங்குகிறது.

இந்தக் கற்பு வாழ்வில் சீதா ராமன் அப்படியே நீடிக்கிறானா அல்லது பல்வேறு பிரச்சனைகளில் சிக்குண்டு அந்நிலையிலிருந்து பிறழ்ந்து விட்டானா என்பதைப் பார்ப்போம்.

    அயோத்யா காண்டத்தில் கைகேயியின் வரம் தசரதனைத் தாக்கி ராமனைக் காட்டுக்குள் செல்ல வைத்தது. சீதையிடம் விடைபெற ராமன் வந்தபோது சீதையும் தன்னுடன் வருவதாகச் சொல்லும்போது ராமன் சீதையிடம் காட்டிலும் மலையிலும்  நடப்பது கடினம், பெரும் துன்பங்கள் விளையும் என்று கூறியும்  சீதை கோபித்து நான் வருவதாகிய ஒன்றுதான் உன் துன்பமா என்று கேட்க ராமன் மறுமொழி உரைக்காமல் புறப்பட்டான்.  காதல் மனைவியை மனம் ஏங்கச் செய்ய விரும்பவில்லை. அவன் காதலுக்குப் பெரிய சோதனைகள் காத்திருக்கிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியாது. பட்டத்தரசனாக ஆக முடியாமல் நாட்டிலும் இருக்க முடியாமல் காட்டிற்கு வந்த சோகம் ராமனுக்கும் சீதைக்கும் கிஞ்சித்தும் இருந்ததாகத் தெரியவில்லை. நெஞ்சில் குடியிருக்கும் திருமகள் போன்ற சீதா தேவியார் அருகில்  இருக்கும் போது ராமன் எதைப் பற்றிக் கவலைப்படப் போகிறான்.  புது உலகத்தில் காலடி எடுத்து வைப்பவர் போல இருக்கிறது அவர்கள் மன ஓட்டங்கள். ராமனும், சீதையும் காட்டிற்குள் நுழைந்தவுடன் காணும் இயற்கைக் காட்சிகள் சீதைக்கு ராமனின் இயல்புகளையும் ராமனுக்கு சீதையின் இயல்புகளையும் நினைவுறுத்துகின்றன. ராமன் அவளோடு கம்பீரமாக நடந்த வருவது பெண் யானையோடு நடந்து வரும் களிறு போல இருந்தது என்பதை இப்படிப் பாடுகிறார்  கம்பர்.

மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா

கலசம் போன்றும் மத மா மருப்பு போன்றும் முலைகளை உடைய சீதையும் ராமனோடு விளையாடிக் கொண்டே நடந்தாள். இப்படிப் பட்ட அழகியை உரிமை கொண்ட ராமன், தாய் தந்தையரிடம் என்ன தேவையோ அதைத்தவிர ஒரு வார்த்தையும் பேசாதவன்.  இப்பொழுது நாட்டின் ஆரவாரங்கள், அரண்மனை ஆச்சாரங்கள், முகமன்கள் இவற்றையெல்லாம் விட்டு காட்டிற்குள் அடி எடுத்து வைத்தவுடன் அந்த காட்டின்  இயற்கையும், மயிலும், குயிலும், பூக்களும், சோலைகளும், இன்ன பிற விலங்கினங்களும் அவன் மனதைக் கவர, பக்கத்தில் அன்பு மனைவி சீதையிடம் மனம் கிளர்ச்சியுற்றுப்  பேசலுற்றான். பதினாறு  பாடல்களில் அவளுக்கு ஒவ்வொரு காட்சியயும் விவரித்து மனையாளோடு குலாவுகிறான் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.  ஒவ்வொரு பாடலிலும் அவளுடைய அழகைப் பலவாறாகப் போற்றிய பின்னர்தான்

காட்சியையே விவரிப்பான் ராமன். இந்த நுட்பத்தை கணவர்கள் பயன்படுத்தினால் இக்காலத்திலும் பயன் உண்டு. இந்தப் பாடலை ராமன் எப்படி காதலுடன் பாடுகிறான் பாருங்கள். அயோத்தியாக் காண்டத்தின் இறுதி வரை சீதா ராமன் காதலில் பொங்கித் ததும்பிக் கொண்டுதான் இருக்கிறான்.

 ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா

முனிவர்கள் குகன் ஆகியோரைச் சந்தித்தபின் சித்திரக்கூட மலைக்குச் செல்லும் வழியில் கருப்பம் தாங்கிய பெண் யானைக்கு தழைகளைக் கொடுக்கும் இயற்கைக் காட்சிகளையும் வேத முனிவர்களுக்கு அங்குள்ள கிளி,பன்றி கடுவன்கள் உணவும் கிழங்கும் கனி காய்களைத் தந்து உதவுவதையும் சொல்லும் அதை நேரத்தில் அவள் தோற்றப் பொலிவையும் புகழ்ந்து கொண்டே செல்கிறான். இதையெல்லாம் கேட்கும் சீதை திரும்ப பேசியதாக கம்பன் ஒரு பாடலும் எழுதவில்லை. கேட்பதிலேயே மகிழ்ந்திருப்பாள் என்று கம்பன் நமக்கு நுட்பமாக உணர்த்துகிறான், பின்னால் வரும் இலக்குவன் பற்றி நினைத்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடல்கள் காதலின் நாடகீயத் தருணங்களைத் தருவதோடு காப்பியத்தை கட்டுக்கோப்பாக எடுத்துச் செல்லவும் உதவுகிறது. ஆரண்ய  காண்டத்தில் பஞ்சவடி வந்து சேரந்தபின் இலக்குவன் சாலை அமைக்கிறான். இளம் ராமனும் அழகு மங்கை சீதையும் பேசாமல் கண்களாலேயே  பரிமாறிக் கொள்ளும் சில பாடல்களில்  இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள், சுடர் மணித் தடங்கள் கண்டாள்

தாமரை மலரில் கண்கள் மூடியிருக்கும் சக்கரவாகப் பறவைகளைக் கண்டு சீதையின் கொங்கைகளைப் பார்த்துப் புன்னகைப்பான் ராமன். தூரத்திலுள்ள மலைகளைப் பார்த்து ராமனின் தோள்களைப் பார்த்துப் புன்னகைப்பாள் சீதை.  

இன்னொரு பாடலில் அன்னத்தைக் கண்டவுடன்  அவளைக் கண்டு இளமுறுவல் செய்வான். சீதையோ ஆண் யானை நடந்து வருவதை காட்டி முறுவலிப்பாள். இப்படி இன்பக்கடலில் திளைத்துக் கொண்டிருந்த அவர்கள் வாழ்வு துன்பமென்னும்  கடலினுள் ஆளப்போவது ராமனால் கவரப்பட்ட சூர்ப்பனகையினால்தான். சூர்ப்பனகையின் ஆசைக்  காமம் நிறைவேறாமல் மூக்கும், காதுகளும், முலைகளும் அறுபட்டு அவமானப்பட்டு அசுரர் குலத்தையே அழிக்கும் விதமாக கரன் முதலானவர்களைப் பலி கொடுத்து ராவணனையும் சீதை மேல் காமமுற வைத்து சீதையை ராமனிடமிருந்து  பிரிக்கவும் செய்தாள். மாயமான் என்பது அசுரரின் சூழ்ச்சி என்று தெரிந்த உடனே ராமனும் இலக்குவனும் சீதையைத் தேடி வருகிறார்கள்

ஓடி வந்தனன்; சாலையில், சோலையின் உதவும்

தோடு இவர்ந்த பூஞ் சுரி குழலாள்தனைக் காணான்;

கூடு தன்னுடையது பிரிந்து, ஆர் உயிர், குறியா,

தேடி வந்து, அது கண்டிலது ஆம் என, நின்றான்

அருமையான உயிர் உடலைப் பிரிந்து பின்னர் அதே உடலைக் குறியாகக் கொண்டு தேடி வரும்போது உடலைக் காணாமையால் திடுக்கிட்டு நிற்பது போல சீதையை பர்ண சாலையில் காணாமல் ராமன் துடித்தான். கம்பர் இங்கே ராமன் ஓடி வந்தனன் என்று கூறும்போதே அவன் நடக்கக் கூடாத ஒன்று நடந்து விடுமோ என்று பதைக்கும்போது அந்த வேதனை நம்மையும் பற்றிக் கொள்கிறது. ராவணனிடம் போராடிப் பார்த்த சீதை ஜடாயுவையும் இழந்து பலவாறாகப்  புலம்பி அழுது மூர்ச்சையாகிறாள் அதற்குப்பின் சீதை உரைப்பது போல எந்தப்  பாடலும் ஆரண்ய காண்டத்தில் இல்லை.  ஆனால் சீதையைப் பிரிந்ததில் இருந்து ஆரண்ய காண்டம் மற்றும் கிஷ்கிந்தா காண்டம் முழுமைக்கும் ராமன் சீதையை  எண்ணிக் கண்ணீர் வடிக்கிறான். கதறுகிறான்; மயங்கி விழுகிறான்; தூக்கத்தை இழக்கிறான்; ஒவ்வொரு நாளையும் கடப்பது  அவனுக்கு பெரும் துன்பமாய் இருந்தது.  உயிரோடு இருப்பதை வெறுத்தான். ஜனகருக்கும் மக்களுக்கும் இந்த உலகத்துக்கும் சீதையை  இழந்த பழிச்சொல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற நிலையில் தன் உயிரை விடுவது நல்லது என்று  பலமுறை நினைக்கும்போதெல்லாம் இலக்குவன் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான், ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் முதலில் இன்பமான சூழலில்  பாடப்பட்டிருக்கும். பின்னர் அதே பாடல் துன்பமான சூழலில் சோகப் பாடலாக மாறி ஒலிக்கும். அதே போல சீதையுடன் இயற்கை காட்சிகளை கண்டு  இன்பத்தில் திளைத்த ராமன் அந்த இயற்கை காட்சிகளை குயிலை, மயிலை, பெண் யானையை,  பூக்களை, சோலையைக்  காணும் போதெல்லாம் சீதை நினைவு வந்து கண்ணீர் விடுகிறான். எத்தனை முறை அவளை நினைத்து பலமுறை செய்வதறியாது நிற்கும்போது இலக்குவனே அவனை ஆற்றுப்படுத்துகிறான். சுக்ரீவனுக்காக  வாலியைக் கொன்று அரசாட்சி அளித்து அவனுடைய உதவியைப் பெற்றதும் சீதையின் பொருட்டே. சீதையைப் பிரிந்து வருந்தும் ராமன் இரவெல்லாம் அவள் நினைவில் தூங்காமல் நீராடச்  செல்லும்போது நீரில் பட்ட அவன் மேனி கொல்லன் உலையில் காய்ச்சிய இரும்பைப்  போல கொதித்தது என்பதைக் கம்பன் இவ்வாறு பாடுகிறான்.  

 காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்,
தோய்த்த தண் புனல் ஒத்தது, அத்தோயமே  

அதன்பின் சுக்ரீவன் சீதையின் அணிகலன்களைக் காட்டும் போதும் மெழுகு போல உருகிக்  கண்ணீர் விடுகிறான், சுக்ரீவன் அவனைத் தேற்றுகிறான். கார்காலப் படலம் முழுதும் இயற்கைக் காட்சிகளும் உயிரினங்களும் அவனுக்கு சீதையின் மேல் விரகதாபத்தை ஊட்டுகின்றன. மனம் சோர்ந்து நிற்கிறான். ராமனைப் போல இவ்வளவு காதல் கொண்ட காப்பியத்தலைவன் வேறு எங்கும் உண்டா என்று தெரியவில்லை. அனுமனிடம் தனியாக சீதையின் அங்க அடையாளங்கள் சொல்லும்போது தன்னுள் ஆழப் பதிந்த சீதையின் உருவத்தை பாதத்திலிருந்து தொடங்கி கேசம் வரை அணு அணுவாகக் கூறுகிறான், அனுமனிடம் சொல்வது மூலம் தனக்கேதான் சொல்லிக் கொள்கிறான், அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவனுடைய காதல் ததும்பி நிற்கிறது. யாழ் இசை, தேன், கரும்புச்சாறு போன்ற சொற்களைப் பேசும் சீதை என்றெல்லாம் அடையாளங்கள் சொன்ன ராமன் இந்தப் பாடலில் சொல்வதைப் படித்தால் கலங்காத மனமும் கலங்கும்.


கரும்பு கண்டாலும்,  மாலைக்
      காம்பு கண்டாலும், ஆலி
அரும்புகண், தாரை சோர
      அழுங்குவேன்; அறிவது உண்டோ
கரும்பு கண்டு ஆலும் கோதை
      தோள் நினைந்து, உவமை சொல்ல,
இரும்பு கண்டனைய நெஞ்சம்,
      எனக்கு இல்லை; இசைப்பது என்னோ

கரும்பைக் கண்டாலும்  வரிசையாக நிற்கும்  மூங்கிலைக் கண்டாலும் கண்களிலிருந்து மழைத்துளி போல கண்ணீரைத்  தாரை தாரையாகப் பெருக்குவேன். வண்டுகள் மொய்த்து ஒலிப்பதற்கு இடமான மாலையைத் தரித்த சீதையின் தோள்களை நினைத்து உவமை சொல்வதற்கு  இரும்பு போன்ற வலிய மனம் எனக்கு இல்லையே. உவமை கூறுவது எவ்வாறு? என்று கூறும்போது இவனல்லவோ பெருங்காதலன் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. அவளைக் கன்னி மாடத்தில் கண்டதிலிருந்து இதோ அனுமனிடம் அவள் அடையாளங்களையும்,  இருவர் மட்டுமே அறிந்த நிகழ்ச்சிகளையும்  சொல்வது வரை அவனுடைய காதல் உச்சத்தைத் தொட்டு விட்டது என்று உறுதியாகக் கூறலாம்.

  அவன் அறம்  செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்வதில்லை. ஆனால் செய்வதெல்லாம், காதல் கூட பேரறமாக மாறி நிற்கிறது. வைணவ தத்தவத்தில் இறைவன் புருஷன், அவனைத் தேடி அடையும் நாமெல்லாம் கோபிகைகள் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு அந்தத் திருமால் மனித அவதாரத்தில் தன் தேவியைத் தேடி அலைகிறான். மனிதன் படும்  உச்சகட்டத்  துயரத்தை அடைகிறான். இப்படிக்கூட நினைக்கலாம். இறைவன் தன்னைச் சரணடைந்தவர்களை எத்தனை தடைகளையும் தாண்டி அழித்து  பக்தனை ஆட்கொள்வான். முதல் ஐந்தாயிரம் பாடல்களில்  கம்பன் வழியாக தன் தீராக் காதலை இராமன் நிகழ்த்திக் கொண்டான் என்றுதான் தோன்றுகிறது. இந்த சீதாராமனின்  பெருங்காதல் காலத்திற்கும் இப்புவியில் நிற்கும்.

படங்கள் – AI மூலமாக பார்கவி



Leave a comment

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started